Wednesday, March 16, 2016

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கும் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கிறது. சிறிய அளவில் குடிசைக் கைத்தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பாரிய பண்ணை முறை கோழிவளர்ப்பானது பறவைக் காய்ச்சல் நோய்க் காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

வரலாறு

இந்தியா, மியன்மார், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (Gallus gallus) இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.[1] சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[2] இக்கோழிவளர்ப்பு பின்னர் ஏனையப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

வளர்ப்பு முறைகள்

கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.

கட்டற்ற கோழி வளர்ப்பு

கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் உணவு வழங்கப்படுகிறது.
இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்க்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.

பண்ணை முறைக் கோழி வளர்ப்பு

கூண்டு இல்லா முறை

கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை
இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.

கூண்டு முறை (Battery Hen)

இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.[3] கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.[4]
கூண்டுடைய கோழிப் பண்ணை
ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில் அதிக எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்களாம் என்பதால் முட்டை உற்பத்தி மிகுதியாகக் காணப்படும். இம்ம்றையின் கீழ் கூண்டு இல்லா முறையை விட 2 தொடக்கம் 4 மடங்கு அதிகமான எண்ணிகையான கோழிகளை வளர்க்கலாம். கோழிகள் முட்டையிட்டவுடன் தானகவே கூண்டைவிட்டு வெளியேறும் வகையில் கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் முட்டைகள் சேதமாவது குறைவாக காணப்படும்.
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம்.[3] பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது.[3] இவ்வாறான கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.[5]
2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்திய நாடுகளில் தடைச் செய்துள்ளது.[6] ஆஸ்திரியா 2004 ஆம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடைச் செய்துள்ளது.[7]

வளர்க்கப்படும் இடங்கள்

கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவும் , 2ம் இடத்தில் சீனாவும், 3ம் இடத்தில் பிரேசிலும், 4ம் இடத்தில் மெக்சிகோவும், 5ம் இடத்தில் இந்தியாவும், 6ம் இடத்தில் பிரித்தானியாவும், 7ம் இடத்தில் தாய்லாந்தும் உள்ளன.

இந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை

இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் இலங்கைக்கும் (50%), வங்காள தேசத்திற்கும் (32.5%), நேபாளத்திற்கும் (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் குவைத்துக்கும் ஓமனுக்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது ஜப்பானுக்கும் போலந்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.
தமிழகத்தின் நாமக்கல் மண்டலம் கோழி வளர்ப்பில் முதன்மையானது.

No comments:

Post a Comment